Sunday, August 2, 2015

இல்லை எவரும் எதிர்த்திடவே (எழிசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

கிளைஞர் எனநீ பிறரை எண்ணு
       கிடைத்திடும் பலரின் உறவுனக்கு
களைக தீய இயல்புகள் தம்மைக்
       காவியம் கூடப் போற்றுமுனை
விளையும் பற்பல நன்மைகள் எல்லாம்
       வெற்றிகள் உன்னைத் தேடிவரும்
இளைஞர் சக்தி ஒன்றாய்ச் சேர்த்திடவே
       இல்லை எவரும் எதிர்த்திடவே

Thursday, July 2, 2015

நிச்சயம் புகழ்நமைத் தேடி வரும் (எழுசீர்க்கழி நெடிலெடி ஆசிரிய விருத்தம்)

ஆர்வம் கொண்டு செயல்படும் போது
        அகிலம் நம்மைப் போற்றிடுமே
சோர்வே இன்றி உழைக்கும் போது
        சுற்றும் உலகம் நம்வசமே
வேர்வை சிந்திப் பாடு பட்டால்
       வெற்றிகள் வந்து குவிந்திடுமே
நேர்மை நமது கொள்கை என்றால்
       நிச்சயம் புகழ்நமைத் தேடிவரும்

Tuesday, June 2, 2015

நல்வாழ்வு (வெளிவிருத்தம்)

சாதி பேதம் சாய்த்திட வருமே – நல்வாழ்வு
நீதி என்றும் நின்றிட வருமே – நல்வாழ்வு
தீதில் லாத திண்மையால் வருமே – நல்வாழ்வு
ஓதிய சான்றோர் வழிசெல வருமே – நல்வாழ்வு

Saturday, May 2, 2015

திகழும் பாரதம் புகழுடனே (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


காமன் வெல்த்துப் போட்டிகளில்
       கண்டோம் இரண்டாம் இடந்தன்னை
நாமினும் கொஞ்சம் முயன்றிருந்தால்
       நமக்கே முதலிடம் கிடைத்திருக்கும்
மேம்படும் உணர்வுடன் முயன்றிட்டால்
       மேவிடும் பலப்பல வெற்றிகளே
தீங்கனி நிகர்த்த வெற்றிகளால்
       திகழும் பாரதம் புகழுடனே

Thursday, April 2, 2015

சுப்பிரமணிய சிவா (அறுசீர்க் கழ்நெடிலடி ஆசிரிய விருத்தம்)

தாய்த்திரு நாட்டிற் காகத்
      தன்னுடல் தன்னில் பற்றும்
நோய்தொழு நோயைப் பெற்று
      நுவலரும் இன்பம் எய்தி
தூய்த்திரு மேனி குன்றித்
      துடித்தநல் சுப்ர மண்ய
சேய்சிவா பிறந்த ஊரெம்
      திண்டியின் வத்தலக் குண்டாம்

Monday, March 2, 2015

கொடைக்கானல் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

வெள்ளியை உருக்கி விடல்போல
      வீழும் வெள்ளி நீர்வீழ்ச்சி
துள்ளிடும் மீனைப் போல்படகு
      செல்லும் தௌ;ளிய நீரேரி
வெள்ளிய மஞ்சாம் ஆடையினை
      உடுத்தி விளங்குது தூண்பாறை
அள்ளிடும் மனத்தை மலர்தம்மின்
      அழகே அவ்வூர் கொடைக்கானல்

Monday, February 2, 2015

திண்டுக்கல் மாவட்டம் (அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பூட்டுடன் வாசம் வீசும்
      புகையிலே மலையின் கோட்டை
சூட்டுநல் வாசப் பூக்கள்
      சுவைமிகு திராட்சை வாழ
வேட்டுபல் லோரும் காண
      விரைகிற கோடைக் கானல்
பாட்டுள வேலன் கோவில்
      பலநலம் திண்டுக் கற்கே

Friday, January 2, 2015

குறுந்தொகை (இருவிகற்ப நேரிசை வெண்பா)

மலரினும் மெல்லிய காமத்தை மாண்பாய்ச்
சிலஅடிகள் தம்மாலே செப்பும் - நலமார்
குறுந்தொகை தன்னைக் குறிப்பிடுக நம்மின்
நறுந்தொகை நூலெனவே நன்கு